என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செஸ் ஒலிம்பியாட்"
- இரு பிரிவிலும் தங்கம் வென்றுள்ள இந்திய அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
- நாட்டிற்கு நம் அணியினர் பெரும் புகழைச் சேர்த்துள்ளது மெச்சத்தக்கது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
அங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டில் பொது மற்றும் மகளிர் என இரு பிரிவிலும் தங்கம் வென்றுள்ள இந்திய அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
செஸ் உலகின் தலைசிறந்த போட்டியில், மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி, நாட்டிற்கு நம் அணியினர் பெரும் புகழைச் சேர்த்துள்ளது மெச்சத்தக்கது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
- இந்த சாதனை இந்தியாவின் விளையாட்டுப் பாதையில் ஒரு புதிய அத்தியாயம் என்றார்.
புதுடெல்லி:
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.
செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர்
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 45-வது பிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நமது செஸ் அணி வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கம் வென்ற ஆண்கள் மற்றும் பெண்கள் சதுரங்க அணிகளுக்கு வாழ்த்துக்கள். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் விளையாட்டுப் பாதையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
- முதல் 8 சுற்றுகளிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 9-வது சுற்றை டிரா செய்தது.
- 17 புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஓபன் பிரிவில் 195 அணிகளும், பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றன.
ஓபன் பிரிவில் நேற்று நடந்த 9-வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி உஸ்பெகிஸ்தானை எதிர் கொண்டது. இந்த போட்டி 2-2 என்ற புள்ளி கணக்கில் டிரா ஆனது. இதுவரை நடந்த 8 சுற்றிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. தற்போதுதான் முதல் முறையாக வெற்றி பெற முடியாமல் டிரா செய்துள்ளது.
இந்திய வீரர்கள் டி.குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகாசி, விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டங்களில் டிரா செய்தனர். 9-வது சுற்று முடிவில் இந்தியா 17 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
10-வது சுற்றில் அமெரிக்காவுடன் மோதுகிறது. அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், சீனா ஆகியவை தலா 15 புள்ளிகளுடன் உள்ளன.
பெண்கள் பிரிவில் இந்திய அணி 9-வது சுற்றில் அமெரிக்காவை சந்தித்தது. இந்த போட்டி 2-2 என்ற கணக்கில் என்ற கணக்கில் டிரா ஆனது. 9-வது சுற்று முடிவில் 15 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 10-வது சுற்றில் சீனாவுடன் மோதுகிறது. கஜகஸ்தான் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
- 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த 9-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி டிரா செய்தது.
புடாபெஸ்ட்:
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இன்று அரங்கேறிய 9-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, உஸ்பெகிஸ்தானைச் சந்தித்தது.
இதில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ், விதித் குஜராத்தி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் உஸ்பெகிஸ்தான் வீரர்களிடம் டிரா செய்தனர்.
இறுதியில் இந்தியா 2-2 என்ற புள்ளிக்கணக்கில் டிரா செய்தது. இதன்மூலம் 17 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி நிச்சயம் தங்கம் வெல்லும்.
இந்திய மகளிர் அணி அமெரிக்காவுடன் நடந்த போட்டியில் டிரா செய்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 15 புள்ளிகள் பெற்றுள்ளது.
11 சுற்றுகள் கொண்ட 9 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் மீதமுள்ள போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினால் நிச்சயம் தங்கம் வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
- 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த 8-வது சுற்றிலும் இந்திய ஆண்கள் அணி அபார வெற்றி பெற்றது.
புடாபெஸ்ட்:
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இன்று அரங்கேறிய 8-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, ஈரானைச் சந்தித்தது.
இதில் அர்ஜூன் எரிகெசி, குகேஷ் மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் ஈரான் வீரர்களை தோற்கடித்தனர். பிரக்ஞானந்தா டிரா செய்தார்.
இறுதியில் இந்தியா 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி தொடர்ந்து 8-வது வெற்றியை ருசித்தது. இதன்மூலம் 16 புள்ளிகள் பெற்றுள்ளது.
இந்திய மகளிர் அணி போலந்துடன் நடந்த போட்டியில் தோல்வி அடைந்தது.
11 சுற்றுகள் கொண்ட 8 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் மீதமுள்ள 3 போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினால் நிச்சயம் தங்கம் வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- அர்ஜூன் எரிகாசி, குகேஷ் இருவரும் இதுவரை 5 ஆட்டத்தில் களம் கண்டு 4 வெற்றி, ஒரு டிராவுடன் அணிக்கு வலுசேர்த்துள்ளனர்.
- குகேஷ், உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புடாபெஸ்ட்:
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் நேற்று முன்தினம் ஓபன் பிரிவில் நடந்த 6-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி 3-1 என்ற கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது. தொடர்ந்து 6 சுற்றுகளிலும் வெற்றிகளை குவித்த இந்தியா 12 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் 7-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள சீனாவை எதிர்கொள்கிறது. இந்திய வீரர்கள் அர்ஜூன் எரிகாசி, குகேஷ் இருவரும் இதுவரை 5 ஆட்டத்தில் களம் கண்டு 4 வெற்றி, ஒரு டிராவுடன் அணிக்கு வலுசேர்த்துள்ளனர். பிரக்ஞானந்தாவும் (2 வெற்றி, 3 டிரா) நல்ல நிலையில் உள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் குகேஷ், உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இவர்கள் இருவர் தான் நவம்பர்- டிசம்பரில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள். அதனால் இன்றைய ஆட்டத்தில் யாருடைய கை ஓங்கப்போகிறது என்ற ஆவல் செஸ் பிரியர்களை தொற்றிக் கொண்டுள்ளது.
பெண்கள் பிரிவிலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்துகிறது. 6 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்தியா 7-வது சுற்றில் ஜார்ஜியாவுடன் (11 புள்ளி) மோதுகிறது. இவ்விரு ஆட்டங்களும் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
- போட்டி வளாகத்துக்கு உள்ளே வரை வந்து சேர்ந்த கார்ல்சன் அங்கிருந்து ஆட்டக் களத்துக்கு செல்வது சாத்தியமானதாக இருக்கவில்லை.
- ஆட்ட விதிகளின் படி போட்டி களத்துக்கு ஆட்டம் தொடங்க 15 நிமிடத்திற்குள் வர வேண்டும்
செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த செப்டம்பர் 10 தொடங்கி வரும் 23-ந்தேதி வரை நடக்கிறது. ஓபன் பிரிவில் 197 அணிகளும் 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் நார்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் நேற்றைய தினம் [வெள்ளிக்கிழமை] கொலம்பிய நாடு வீரரை எதிர் கொள்ள இருந்தார். இந்த வருட ஒலிம்பியாடில் கார்ல்சனின் முதல் போட்டியான இதில் கலந்து கொள்ளாமலேயே அவர் தோற்கும் நிலைக்கு சென்ற சம்பவம் பலரை புருவம் உயர்த்த வைத்துள்ளது. அதாவது, நேற்றய போட்டிக்கு கார்ல்சன் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதிக டிராபிக் இருந்ததால் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து போட்டி நடக்கும் இடத்துக்கு வர தாமதம் ஆகும் என்பதால் சைக்கிளில் வர கார்ல்சன் முடிவெடுத்துள்ளார். போட்டி தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் போட்டி வளாகத்துக்கு உள்ளே வரை வந்து சேர்ந்த கார்ல்சன் அங்கிருந்து ஆட்டக் களத்துக்கு செல்வது சாத்தியமானதாக இருக்கவில்லை.
இதனால் எல்லாம் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் அங்கு படம் பிடித்துக்கொண்டிருந்த மரியா எமிலியானோவா என்ற புகைப்பட கலைஞர் கார்ல்சனுக்கு அந்த வளாகத்தில் இருந்து ஆட்டம் நடக்கும் களத்துக்கு செல்வதற்கான குறுக்கு வழியை காண்பித்து வழிகாட்டியுள்ளார்.
World No.1 Magnus Carlsen arrived at Round 3 of the 45th Chess Olympiad, for his first game, by bike! ?♂️ What's the first word that comes to mind after watching Magnus' "journey" to his board? #ChessOlympiad pic.twitter.com/OKnexThElN
— International Chess Federation (@FIDE_chess) September 13, 2024
இதனால் களத்துக்கு 10 நிமிடம் மட்டுமே தாமதமாக களத்துக்கு சென்று சேர்ந்த கார்ல்சன் தகுதி நீக்கம் செய்யப்படுவதில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளார். ஆட்ட விதிகளின் படி போட்டி களத்துக்கு ஆட்டம் தொடங்க 15 நிமிடத்திற்குள் வர வேண்டும். இதற்கிடையே இந்த போட்டியில் கார்ல்சன் 40 நகர்வுகளுடன் கொலம்பிய வீரரை தோற்கடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
?? Magnus Carlsen arriving 10 minutes late to the 3rd round.This is Magnus' first game in this #ChessOlympiad.Norway drew to the lower-seeded Canada yesterday and plays against Colombia today. Will the World #1 help bring the team to victory?ℹ️ The default time in the… pic.twitter.com/f8E38YtFSj
— International Chess Federation (@FIDE_chess) September 13, 2024
- இந்திய ஆண்கள் அணி முதல் ரவுண்டில் மொராக்கோவை எதிர்கொண்டது.
- முதல் ரவுண்டில் குகேசுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
புடாபெஸ்ட்:
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்றுள்ளன. மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை சேர்க்கும் அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றும்.
போட்டித்தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இந்திய ஆண்கள் அணி முதல் ரவுண்டில் மொராக்கோவை எதிர்கொண்டது. இந்திய வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். அவர் 30-வது காய் நகர்த்தலில் மொராக் கோவின் டிசிர் முகமதுவை தோற்கடித்தார். அர்ஜூன் எரிகாசி, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். முதல் ரவுண்டில் குகேசுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
பெண்கள் பிரிவில் இந்தியா முதல் சுற்றில் ஜமைக்காவை சந்தித்தது. இதில் இந்தியாவின் வைஷாலி, ஜமைக்காவின் கிளார்க் அடானியையும், தானியா சச்தேவ், வாட்சன் கேப்ரியாலையும் சாய்த்தனர்.
- 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது.
- இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும்.
புடாபெஸ்ட்
செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மிக குறுகிய காலத்தில் தமிழக அரசு சார்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 197 அணிகளும் 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றன.
மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.
'ஸ்விஸ்' முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு சுற்றில் அணியில் 4 பேர், எதிரணியினருடன் மோதுவார்கள்.
கடந்த முறை இந்திய அணி இரு பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்திய அணியில் டி.ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மாற்று வீராங்கனையாக தானியா சச்தேவ் இருக்கிறார்.
ஆண்கள் பிரிவில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, குகேஷ் மற்றும் விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகாசி, ஹரிகிருஷ்ணா ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள். போட்டித்தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இவர்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.
உலகின் 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்சென் தனிப்பட்ட முறையில் எல்லா பட்டங்களையும் வென்று விட்டார். ஆனால் அணியாக செஸ் ஒலிம்பியாட் எட்டாக்கனியாக இருக்கிறது. அந்த ஏக்கத்தை தணிக்க இந்த முறை அவர் கடுமையாக முயற்சிப்பார்.
- பிரக்யானந்தா தற்போது பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வருகிறார்.
- 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந் தேதி நிறைவு பெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் உலகம் முழுவதும் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடர் குறித்து தற்போது வரை பல நாட்டு வீரர்களும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை ஏற்கனவே இருமுறை தோற்கடித்து செஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்யானந்தா தற்போது பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வருகிறார். அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இன்று எனது 12-ம் வகுப்பு தேர்வில் ஆங்கில தேர்வுக்கான கேள்வி தாளை கொடுத்தனர். அதில் வந்த கேள்வியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அந்த கேள்வி என்னவென்றால், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எவ்வாறு நடைபெற்றது என்பதை விவரித்து வெளிநாட்டில் படிக்கும் உங்கள் நண்பருக்கு கடிதம் எழுதுங்கள் என கேள்வித்தாளில் இடம் பெற்றிருந்தது என குறிப்பிட்டிருந்தார்.
பிரக்யானந்தாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இதனை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த கேள்விக்கு நீங்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றீர்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். முடிவுகள் வெளிவந்தவுடன் பகிரவும் என பதிவிட்டிருந்
- செஸ் ஒலிம்பியாட்டில் மேலும் ஒரு மணி மகுடமாய் அமைந்தது, யோகா பயிற்சி.
- மன புத்துணர்ச்சி பெறவும், செஸ் வீரர்களை உற்சாகமாக வைக்கவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் மூலம் உலக அரங்கில் தமிழகத்தின் மீதான பிம்பம் அதிகரித்துள்ளது. பிரம்மாண்டமும், பாரம்பரியமும் இணைந்திருந்தது. நம் நாட்டவர் மட்டுமல்ல வெளிநாட்டினரும் வாய் பிளந்து, ரசித்து, ருசித்து செஸ் ஒலிம்பியாட்டை ஒரு திருவிழாவாக கொண்டாடி தீர்த்தோம். நேப்பியார் பாலம் முதல் தம்பி சிலை வரை ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் என்றால் அது மிகையாகாது. செஸ் ஒலிம்பியாட்டில் மேலும் ஒரு மணி மகுடமாய் அமைந்தது, யோகா பயிற்சி. மன புத்துணர்ச்சி பெறவும், செஸ் வீரர்களை உற்சாகமாக வைக்கவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுரியின் பேராசிரியர் இந்திரா தேவி மேற்பார்வையில் செஸ் வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
அது குறித்த ஒரு நேர்காணல்!
யோகா மூலம் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம்?
யோகா என்பது மருந்தில்லா மருத்துவம். சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு யோகா மூலமும், இயற்கை உணவின் மூலமுமே சரி செய்து விடுவோம். குறிப்பாக ஐடி துறையிலும், உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும் சீக்கிரம் சர்க்கரை, உடல் பருமனுக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு நிச்சயம் இந்த யோகா வரப்பிரசாதம் தான்.
செஸ் ஒலிம்பியாட்டில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
ஆயுஷ் என்ற மத்திய அரசு நிறுவனத்தின் மூலம் தமிழக அரசு எங்களை அணுகியது. சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி தான் யோகாவில் தலைமையகம் என்பதால், வீரர்களுக்கு பயிற்சி அளிக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. 187 நாடுகளில் இருந்து வீரர்கள் செஸ் ஒலிம்பியாட்டிற்கு தமிழகம் வந்தனர். கிட்டத்தட்ட 2000 வீரர்கள். அவர்கள் யோகா பயிற்சியில் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர். நாங்கள் 21 குழுக்களாக பிரிந்து வீரர்களுக்கு பயிற்சி அளித்தோம். சுமார் 60 யோகா மருத்துவர்கள் இதில் பங்கேற்றோம்.
வெளிநாட்டு வீரர்கள் யோகாவில் எப்படி தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்?
ஆரம்பத்தில் கொஞ்சம் பேர் தான் இதில் பங்கேற்றனர். யோகா பயிற்சியை பற்றி அறிந்ததும் நிறைய பேர் இதில் பங்கேற்க துவங்கினர். இது அவங்களுக்கு புதுவித அனுபவமா இருந்ததா சொன்னாங்க. ஸ்ட்ரெஸ் ரிலீபா இருந்ததாகவும், புத்துணர்ச்சியுடன் இருந்ததாகவும் சொன்னாங்க.
எத்தனை நாட்கள் அவங்களுக்கு யோகா பயிற்சி அளித்தீர்கள்?
செஸ் வீரர்கள் யோகா கத்துக்கிறதில ரொம்பவும் ஆர்வம் காட்டினாங்க. நம்ம தமிழக அரசு இலவசமாகவே யோகா பயிற்சி அளித்ததை வியந்து பார்த்தாங்க. எங்க நாட்ல யோகா மிகவும் காஸ்ட்லியானது. இங்கு இலவசமாக சொல்லிக் கொடுப்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறினர். செஸ் ஒலிம்பியாட் நடந்த 14 நாட்களுமே நாங்க யோகா வகுப்பு எடுத்தோம். காலை 8 மணி முதல் 12 மணி வரை நாங்க யோகா பயிற்சி சொல்லிக் கொடுத்தோம்.
எந்த நாட்டினர் ஆர்வமுடன் யோகா கத்துக்கிட்டாங்க?
நைஜீரியா, அமெரிக்கர், உகாண்டா இவங்க ரொம்ப ஆர்வமா கத்துக்கிட்டாங்க. ஜார்ஜியா, டான்சானியா, டொமினிகா, ஸ்பெயின், உக்ரைன் இந்த நாடுகளில் இருந்தும் யோகா கத்துக்கிட்டாங்க. அவங்க அனுபவங்களை வீடியோவா எங்க கிட்ட பகிர்ந்திக்கிட்டாங்க.
செஸ் வீரர்களுக்கு யோகா எந்தளவுக்கு பயனுள்ளதா இருந்தது?
முதல்ல செஸ் வீரர்களுக்கு ஏன் யோகா முக்கியம்னு சொல்றேன். மத்த விளையாட்டுக்கள் மாதிரி செஸ் கிடையாது. இது மைண்ட் கேம்ஸ். ஒரே இடத்தில் உக்கார்ந்து மூளைக்கும், கண்களுக்குமான ஒரு விளையாட்டு. இதனால், சீக்கிரமாவே அவங்க உடலும், மனமும் சோர்வடைந்துவிடும். புது இடம்ங்கிறதால தூங்குவதற்கும் சிரமம்பட்டிருப்பாங்க. யோகா பண்ணுவதால் நல்லா தூங்கினதா சொன்னாங்க. விளையாட்டுல நல்லா கவனம் செலுத்தினாங்க.
என்னென்ன யோகா பயிற்சி அவங்களுக்கு சொல்லிக் கொடுத்தீங்க…
யோகா ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம், தாரன பயிற்சி, யோக நித்திரை பயிற்சி அளித்தோம். பிராண முத்திரை, இருதய முத்திரை, கைகளை தட்டுவதையும், சிரிப்பு யோக சிகிச்சையும் கொடுத்தோம். திராட்டகா என்ற கண்களுக்கான பயிற்சியும் அளித்தோம்.
யோகா பயிற்சி பெற்ற வீரர்கள் என்ன சொன்னாங்க…
யோகா பண்ணிட்டு போனதால தான் எங்களால நல்லா விளையாட முடிந்ததுனு சொன்னாங்க. தூங்கி எழுந்து புத்துணர்ச்சியோட இருந்ததா சொன்னாங்க. தன்னம்பிக்கையும், உற்சாகமும் இருந்ததாகவும் சிந்திக்கும் திறமை அதிகப்படுத்தியதுனு சொன்னாங்க.
கொரோனா சமயத்தில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?
கொரோனா சமயத்தில், எங்கள் மருத்துவக் குழு மருத்துவமனைக்கே சென்று நோயாளிகளுக்கு மூச்சுப் பயிற்சி, தியானம் சொல்லிக் கொடுத்தோம். ஆக்சிஜன் அளவு உடலில் குறையும் நோயாளிகளுக்கு நாங்கள் அளித்த மூச்சுப் பயிற்சியின் மூலம் அவர்களின் உடலில் இயற்கையான முறையில் ஆக்சிஜன் அளவு அதிகரித்தது.
- இதுவரை 9 செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடி விட்டேன்.
- நான் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த சூழலில் பதக்கம் வென்றிருப்பது மிகவும் உணர்வுபூர்வமானது.
சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியா 1-வது பெண்கள் அணியில் இடம் பிடித்தவர்களில் ஹரிகா துரோணவல்லியும் ஒருவர். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஹரிகா நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். ஆனாலும் சொந்த மண்ணில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக உடல்நிலையை பொருட்படுத்தாமல் களம் இறங்கினார். 7 சுற்றுகளில் ஆடிய அவர் அனைத்து ஆட்டங்களிலும் 'டிரா' செய்திருந்தார்.
வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் சூடிய பிறகு 31 வயதான ஹரிகா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய செஸ் அணிக்காக எனது பயணம் 18 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது எனது 13-வது வயதில் தொடங்கியது. இதுவரை 9 செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடி விட்டேன். இந்திய பெண்கள் அணிக்காக பதக்கமேடையில் ஏற வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அந்த கனவு ஒரு வழியாக இப்போது நனவாகி இருக்கிறது. நான் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த சூழலில் பதக்கம் வென்றிருப்பது மிகவும் உணர்வுபூர்வமானது.
இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடத்தப்படுவது குறித்து கேள்விப்பட்ட போது, எனது டாக்டர் எந்த சிக்கலும் இன்றி தொடர்ந்து உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் இந்த போட்டியில் விளையாடுவது சாத்தியம் என்று என்னிடம் கூறினார். அதன் பிறகு எனது சிந்தனை, செயல் எல்லாமே ஒலிம்பியாட்டில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் ஐக்கியமானது. அதற்காக ஒவ்வொரு அடியையும் முழு அர்ப்பணிப்புடன் எடுத்து வைத்தேன். வளைகாப்பு, விருந்து, கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம். எல்லாமே ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற பிறகு தான் என்று தீர்க்கமாக முடிவு எடுத்தேன். களத்தில் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்தேன். கடந்த சில மாதங்களாக இந்த தருணத்துக்காகத் தான் காத்திருந்தேன். இப்போது அதை அடைந்து விட்டேன். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய பெண்கள் அணி பதக்கத்தை உச்சிமுகர்ந்து விட்டது.
இவ்வாறு ஹரிகா கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்